×

1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

காரமடை: கோவை காரமடை பகுதிகளில் எஸ்ஐ  சுல்தான் இப்ராஹிம், தலைமை காவலர் சிவபிரகாஷ் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே இரு சக்கர வாகனங்களில் கை பையுடன் வந்த 4 பேரை போலீசார் விசாரித்தனர். அவர்கள், திருச்சூரை சேர்ந்த தினேஷ் (23), ஆனந்த் (25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (41), திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பது தெரிந்தது. 26 கட்டுகளுடன் கூடிய மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இவர்கள் பழைய கட்டிடங்களை தகர்த்து கொடுக்கும் வேலை செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜன் (46) என்பவரிடம் பணியாற்றி வருவதும், ரங்கராஜன் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு எவ்வித உரிமமும் இல்லாமல் வெடிபொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், ரங்கராஜன் பயன்படுத்தியது போக மீதமுள்ள எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை அதிக விலைக்கு சட்ட விரோதமாக கேரளாவிற்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து, ரங்கராஜனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது வேலை நடந்து வரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகளும், 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரங்கராஜனுக்கு வெடிபொருட்களை சப்ளை செய்த பெருமாள் (60), கோபாலன் (58), சந்திரசேகரன் (58) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : 1244 Electric detonator, 622 Gelatin sticks, confiscation
× RELATED தமிழகத்தின் பல மாவட்டங்களை குளிர்வித்த கோடை மழை!!